Wednesday, May 16, 2012

அமெரிக்காவுக்கு அடிபணியும் இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு!

16 May 2012

புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா படிப்படியாகக் குறைத்து வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் மூலம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படுவது தெரியவந்துள்ளது.

ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடாவடித்தனமாக அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்திருப்பதுடன், பிற நாடுகளையும் தங்களுடன் பங்குசேர நிர்பந்தித்து வருகின்றன. கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகைத் தந்திருந்த அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டனும் இதுப்பற்றி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக் குறித்த கேள்விக்கு மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியது: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது. இதில் ஏறத்தாழ 12 சதவீதம் ஈரானிலிருந்து இறக்குமதியாகிறது. 2010-2011 ஆண்டில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு 1 கோடி 85 லட்சம் டன் ஆகும். ஆனால் 2011-2012 ஆண்டில் இது 1 கோடி 74 லட்சத்து 40 ஆயிரம் டன் ஆகக் குறைந்தது.

இந்த நிதியாண்டில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு 1 கோடி 55 லட்சம் டன் ஆக இருக்கும். பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் முடிவை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களே முடிவு செய்கின்றன. இதற்கு தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட காரணங்கள் உள்ளன.

நமது தேவையின் பெரும்பான்மையான அளவை ஒரே இடத்திலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாம் கச்சா எண்ணெயைத் தருவிக்கிறோம். மொத்தம் முப்பது நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இது இந்திய எண்ணெய்த் தேவையைப் பொருத்த அளவில் பாதுகாப்பானதாகும் என்று அவர் தமது பதிலில் தெரிவித்தார்.

மேற்கத்தியர்களின் ஈரானுடனான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் – ஈரான்!

16 May 2012

டெஹ்ரான்:ஈரானுடனான அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக வேண்டும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

வருகிற மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகச்சிறந்த பலன் கிடைக்க வேண்டுமானால் அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் மேம்படுத்த வேண்டும் என நஜாத் தெரிவித்தார்.

கூமான் நகரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு நஜாத் உரை நிகழ்த்தினார். அமைதியான காரணங்களுக்கு அணுசக்தியை உபயோகிப்பதற்கான உரிமையை ஈரான் மக்கள் கடுகு அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அத்தகையதொரு உரிமை ஈரானுக்கு கிடையாது என்று வாதிடும் செருக்கை மேற்கத்திய நாடுகள் கைவிட வேண்டும் என நஜாத் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரமின் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில், நிர்பந்தமோ, முன் நிபந்தனைகளோ இல்லாத பேச்சுவார்த்தையை மட்டுமே நாங்கள் வரவேற்போம்.

இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல் உருவானது. அதே சூழல் பாக்தாதிலும் உருவானால் பேச்சுவார்த்தை பலன் வாய்ந்ததாக அமையும் என்று பெரஸ்த் கூறினார்.

சட்டவிரோத சுரங்கத்தொழில்: எடியூரப்பாவின் வீட்டில் சி.பி.ஐ ரெய்ட்!

16 May 2012

பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத் தொழில் ஊழல் தொடர்பாக முன்னாள் கர்நாடகா மாநில முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பெங்களூர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது.

பெங்களூரில் எடியூரப்பாவின் டாலர் காலனியில் அமைந்துள்ள வீட்டில் 6 உறுப்பினர்களை கொண்ட சி.பி.ஐ குழு ரெய்ட் நடத்தியது.
எடியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்து நேற்று முன்தினம் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்தது.

எடியூரப்பாவின் மகன்களான பி.ஒய்.ராகவேந்திரா எம்.பி, பி.ஒய்.விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார், ஜிண்டால் க்ரூப்பின் கீழ் இயங்கும் சவுத் வெஸ்ட் சுரங்க நிறுவனம் ஆகியோர் 2 முதல் ஐந்து வரையிலான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு பெங்களூர் சி.பி.ஐ டி.ஐ.ஜி ஹிதேந்திரா டெல்லியில் சி.பி.ஐயின் தலைமையகத்தி வழக்கை பதிவுச் செய்துள்ளார்.

இந்தியாவில் நடந்த சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு ஏப்ரல் 20-ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையின் சிபாரிசின் அடிப்படையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்து விசாரணை துவங்கியதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் எடியூரப்பாவும், அவரது மகன்களும் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் கைது செய்யப்படலாம் என சூழல் உருவானது. இதனிடையே கைது செய்யப்படுவதை தடுக்க எடியூரப்பா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

எடியூரப்பாவின் உறவினர்களுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு 2006-ஆம் ஆண்டிலும், சவுத் வெஸ்ட் மைனிங் லிமிட்டட் நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு 2010-ஆம் ஆண்டிலும் சுரங்கத் தொழிலுக்கு நில அனுமதி வழங்கியதில் கடுமையான விதி முறை மீறல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக உயர்மட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

மேலும் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினர் நடத்தும் ‘ப்ரேரணா எஜுக்கேஷன் சொசைட்டிக்கு’ 20 கோடி ரூபாய் சவுத் வெஸ்ட் மைனிங் லிமிட்டட் நன்கொடை வழங்கியது குறித்தும், கர்நாடகா லோக் ஆயுக்தாவுக்கு மூத்த போலீஸ் அதிகாரிகளை டெபுட்டேசனில் நியமித்தது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தும்.

3 மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் நல்லெண்ணக் குழு:நிபந்தனைகளை வெளியிட தகவல் உரிமை ஆணையர் உத்தரவு!

16 May 2012

புதுடெல்லி:ஹஜ் நல்லெண்ணக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகளை தேர்வுச் செய்வதற்கான அளவுகோலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் உரிமை ஆணையர்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளார்.

கமிஷனின் இணையதளத்தில் இதுத்தொடர்பான தகவலை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் வெளிப்படையான தன்மை அத்தியாவசியம் என்பதால் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் உரிமை ஆணையர் ஷைலேஷ் காந்தி விளக்கமளித்துள்ளார்.

நல்லெண்ணக் குழுவில் தன்னை தேர்வுச் செய்யாததன் காரணம் குறித்து விளக்களிக்க கோரி ஜம்மு-கஷ்மீர் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் அப்துல் ரஷீத் ஹஞ்சூரா சமர்ப்பித்த மனுவில் ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வழக்கறிஞர் தொழிலில் தனக்கு 30 ஆண்டுகள் அனுபவம் இருப்பதாகவும், ஏராளமான சமூக-தன்னார்வ அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாகவும் அப்துல் ரஷீத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட உயர்மட்ட முஸ்லிம் நபர்கள் பிரதமரின் ஹஜ் நல்லெண்ணக் குழுவில் இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை: தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு!

16 May 2012

சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளராக ஜாகீர் உசேன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். ஜாகீர் உசேன் புதுக்கோட்டை தே.மு.தி.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.