Wednesday, May 16, 2012

அமெரிக்காவுக்கு அடிபணியும் இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு!

16 May 2012

புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா படிப்படியாகக் குறைத்து வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் மூலம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படுவது தெரியவந்துள்ளது.

ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடாவடித்தனமாக அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்திருப்பதுடன், பிற நாடுகளையும் தங்களுடன் பங்குசேர நிர்பந்தித்து வருகின்றன. கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகைத் தந்திருந்த அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டனும் இதுப்பற்றி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக் குறித்த கேள்விக்கு மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியது: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது. இதில் ஏறத்தாழ 12 சதவீதம் ஈரானிலிருந்து இறக்குமதியாகிறது. 2010-2011 ஆண்டில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு 1 கோடி 85 லட்சம் டன் ஆகும். ஆனால் 2011-2012 ஆண்டில் இது 1 கோடி 74 லட்சத்து 40 ஆயிரம் டன் ஆகக் குறைந்தது.

இந்த நிதியாண்டில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு 1 கோடி 55 லட்சம் டன் ஆக இருக்கும். பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் முடிவை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களே முடிவு செய்கின்றன. இதற்கு தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட காரணங்கள் உள்ளன.

நமது தேவையின் பெரும்பான்மையான அளவை ஒரே இடத்திலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாம் கச்சா எண்ணெயைத் தருவிக்கிறோம். மொத்தம் முப்பது நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இது இந்திய எண்ணெய்த் தேவையைப் பொருத்த அளவில் பாதுகாப்பானதாகும் என்று அவர் தமது பதிலில் தெரிவித்தார்.