Wednesday, May 16, 2012

மேற்கத்தியர்களின் ஈரானுடனான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் – ஈரான்!

16 May 2012

டெஹ்ரான்:ஈரானுடனான அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக வேண்டும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

வருகிற மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகச்சிறந்த பலன் கிடைக்க வேண்டுமானால் அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் மேம்படுத்த வேண்டும் என நஜாத் தெரிவித்தார்.

கூமான் நகரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு நஜாத் உரை நிகழ்த்தினார். அமைதியான காரணங்களுக்கு அணுசக்தியை உபயோகிப்பதற்கான உரிமையை ஈரான் மக்கள் கடுகு அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அத்தகையதொரு உரிமை ஈரானுக்கு கிடையாது என்று வாதிடும் செருக்கை மேற்கத்திய நாடுகள் கைவிட வேண்டும் என நஜாத் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரமின் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில், நிர்பந்தமோ, முன் நிபந்தனைகளோ இல்லாத பேச்சுவார்த்தையை மட்டுமே நாங்கள் வரவேற்போம்.

இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல் உருவானது. அதே சூழல் பாக்தாதிலும் உருவானால் பேச்சுவார்த்தை பலன் வாய்ந்ததாக அமையும் என்று பெரஸ்த் கூறினார்.